திருத்தலப் பேராலய வரலாறு

St. Francis Xavier
1542 – புனித சவேரியார் வருகை

முத்துக்குளித்துறையில் ஆன்மீகப் பணியாற்றும் தாகத்துடன் புனித சவேரியார் தூத்துக்குடி வந்து சேர்ந்தார். சிறு மணியடித்து சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஞானஉபதேசம் செய்தார். நோயுற்ற பலருக்கு நற்சுகமளித்தார். இறந்து போனவர்களுக்கு இறை துணையோடு மறுவாழ்வு கொடுத்தார். சென்ற இடமெல்லாம் இறைவல்லமையை வெளிப்படுத்திய இவரது ஆன்மீக பலத்தால் புதிய கிறிஸ்தவர்கள் இவரை தங்களது ஞானத் தகப்பனாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

1555- ஜூன் 9: பனிமய அன்னை அற்புத சுருபம்

மணிலாநகர் அகஸ்தீன் கன்னியர் மடத்திலிருந்து புனித சவேரியாரின் வேண்டுகோளுக்கிணங்க, பனிமய அன்னையின் அற்புத அழகிய சுரூபம் ‘சந்தலேனா’ கப்பல் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

1582- ஆகஸ்ட் 5: பனிமய அன்னை பெயர் காரணம்

இரக்கத்தின் மாதாவின் ஆலயம், கொச்சி ஆயர் மேதகு தவோரா ஆண்டகையால் பனிமய அன்னை ஆலயமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஒவ்வொராண்டும் அவ்வாலயத்தின் திருநிலைப்பாட்டு ஆண்டுவிழா ஆகஸ்ட் 05ஆம் நாள் கொண்டாடப்பட்டது. (கி.பி. 352-ஆம் ஆண்டில் உரோமையில், பனி பெய்ய முடியாத கோடைக்காலத்தில், எஸ்கலின் என்ற குன்றின் மேல் அற்புதமாகப் பனி பெய்யச் செய்து, அதே இடத்தில் தனக்கு ஓர் ஆலயம் எழுப்புமாறு அன்றையப் பாப்பிறை லிபேரியுஸ் என்பவரையும், அருளப்பர் என்னும் தனவந்தரையும் காட்சி ஒன்றில் அன்னை பணித்ததாக வரலாறு. எஸ்கலின் குன்றின் மேல் எழுந்த இப்பனிமய அன்னை ஆலயம்தான் இன்று இத்தாலிய மொழியில் ‘மரியா மஜோரே’, ஆங்கிலத்தில் ஆயசல ஆயதழச என அழைக்கப்படுகிறது). ஆகஸ்ட் 05ஆம் தேதி எஸ்கலின் குன்றின் மேல் காட்சிக் கொடுத்த பனிமய அன்னையின் திருவிழாவாகவும் அமைந்து விட்டதால் இத்திருவிழா பனிமய அன்னையின் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது. பனிமய அன்னை திருவிழாவின் தீவிரம் காலப்போக்கில் இந்த அன்னை பனிமய அன்னை என்றும், இத்தேவாலயம் இன்று பனிமய அன்னை பேராலயமென்றும் நிலைத்து பதிவு பெற்றது.

1707- ஏப்ரல் 4: பேரிடியைத் தன்மீது தாங்கிய அன்னை

முத்துநகர் மீது விழுந்த பேரிடியைத் தன்மீது தாங்கி, தூத்துக்குடி மக்களை அற்புதமாகக் காப்பாற்றினார் நம் பனிமய அன்னை. நகரத்தையே தீக்கிரையாக்கும் உக்கிரத்தோடு வீழ்ந்த பேரிடியை, அன்னையவள் தன்னில் உள்வாங்கி நகரைக் காத்துக் கொண்டாள். சேதாரங்கள் ஏதுமின்றி அன்னையின் திருச்சுரூபம் கருநீல வண்ணமானது. அன்னையின் முன்பாக பிரார்த்தனை செய்துகொண்டிருந்த தந்தை விஜிலியுஸ் மான்சியும் அவர் உதவியாளர்களும் அற்புதமாய் உயிர்பிழைத்தனர். தந்தையின் உணர்வுப்பூர்வமான பதிவுகளே இவ்வற்புதத்தின் சாட்சி.

1713- ஆகஸ்ட் 5: புதிய ஆலயம்

பனிமய அன்னையின் ஆலயம் புதிதாய் கட்டப்பட்டது

1806- தங்கத் தேர்

சமூக வாழ்வியல் தொடர்பின் காரணமாக தலைமுறை தலைமுறையாக ஆதி சமய திருக்கோயில்களோடும், வழிபாட்டு முறையோடும் தொடர்பு கொண்டிருந்ததையும் அவ்வழிபாட்டு தலங்களில் தேர் வடம் தொட்டு கொடுப்பதை உரிமையாகவும் கௌரமாகவும் கொண்டிருந்ததால் விசுவாச நெருடல்களுக்கு ஆளான இம்மக்கள், பிராமாண்டமான முதல் கத்தோலிக்க தேரை உருவாக்கினர். தங்க அன்னை தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு முத்துநகர் வீதிகளில் முதல் தங்கத்தேர் பவனி நடைப்பெற்றது.

1960- ஆகஸ்ட் 5:

உரோமை, மேரி மேஜர் பனிமய மாதா உயர் பஸிலிக்காவுடன் பாப்பரசர் 23ம் அருளப்பர் இணைத்தார்.

1982- ஜூலை 30:

பனிமய அன்னை ஆலயத்தின் 400ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜாண்பவுல் அன்னையின் ஆலயத்தைப் ‘பஸிலிக்கா’ அந்தஸ்துக்கு உயர்த்தினார்.

1983- ஜனவரி 26:

இம்மரியன்னையின் திருத்தலம் ‘பஸிலிக்கா’ பேராலயமாக திருநிலைப்படுத்தப்பட்டது.

2015- ஜனவரி 13:

பேராலயத்தின் இரண்டாவது பங்குத்தந்தையான அருள்தந்தை. அந்தோணி சூசைநாதர் (1932 - 1938) இறையடியாராக உயர்த்தப்பட்டார்.

திருத்தந்தையின் தூதுவர்கள் வருகை:

2000 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் திருத்தந்தையின் தூதுவர்கள் நம் அன்னையின் பேராலயத்திற்கு வருகை தந்தார்கள்.

தூய பனிமய அன்னையின் பற்பல சிறப்பு பெயர்கள்:

முத்துக்குளித்துறை மக்கள் “முத்துக்குளித்துறைக்கெல்லாம் பாதுகாவலி” என்றும். போர்த்துகீசியர் “தஸ்நேவிஸ் மாதா” மற்றும் “பனிமய மாதா”. இத்தாலி மொழியில் “மரிய மஜோரே” என்றும், ஆங்கிலத்தில் “Mary Major” என்றும், மீனவ மக்கள் தங்களின் தொழிலின் பின்னணியில் “படகின் மாதா”. தொடக்கத்தில் இந்த அன்னையை “இரக்கத்தின் மாதா”, இடியிலிருந்து முத்துக்குளித்துறை மக்களை காப்பாற்றியதால் “இடியின் மாதா”, “ஏழு கடற்துறை மாதா” என்று அழைத்தார்கள். தற்பொழுது தூத்துக்கடி மக்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் அன்னையாக இருப்பதால் “எல்லாருக்கும் ஏக அடைக்கல தாய்” என்று அனைவரும் அழைக்கின்றனர்.

தங்கத்தேர் உலாவந்த ஆண்டுகள்

பாரம்பரிய முறைப்படி பார்போற்றும் அன்னையினுடைய தங்கத்தேர் பவனியானது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அல்ல. மாறாக விசேஷ மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆண்டுகளில் மட்டுமே எடுக்கப்படுகிறது. முத்துமாநகரில் அன்னையினுடைய தங்கத்தேர் பவனி நடைபெற்ற ஆண்டுகள் பின்வருமாறு. 1806, 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000, 2007, 2013, 2023.