Our Lady Of Snows Basilica

"இதோ உன் தாய்"
தமிழகத்தின் மிகத் தொன்மையான மரியன்னைப் பேராலயங்களுள் ஒன்றுதான் பனிமய அன்னை பேராலயம். 1582ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் அன்று இன்றைய கெரக்கோப் தெருவில் இரக்கத்தின் மாதா ஆலயம் என்ற பெயரில் கொச்சி ஆயர் மேதகு தவோரா ஆண்டகையால் இவ்வாலயம் அர்ச்சிக்கப்பட்டது. அதன்பின் 1713ஆம் ஆண்டு அருள்தந்தை மான்சி சே.ச. அவர்களின் முயற்சியால் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. 1806ஆம் ஆண்டு பனிமய அன்னைக்கு முதல் பொற்தேர் பவனி நடத்தப்பட்டது. 1960ஆம் ஆண்டு உரோமையிலுள்ள மேரி மேஜர் உயர் பசிலிக்காவுடன் திருத்தந்தை 23ஆம் ஜான் அவர்களால் இணைக்கப்பட்டது. ஆலயம் கட்டப்பட்ட 400ஆம் ஆண்டின் நினைவாக, 1982ஆம் ஆண்டு பங்குத் தந்தை அருள்திரு. லாம்பர்ட் மிராண்டா அவர்களின் முயற்சியால் இப்பேராலயம் பசிலிக்காவாக திருத்தந்தை புனித 2ஆம் ஜான் பவுல் அவர்களால் உயர்த்தப்பட்டது. அதை முன்னிட்டு அந்த ஆண்டும் (1982), தொடர்ந்து 2000, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அன்னைக்குத் தங்கத் தேர் எடுக்கப்பட்டது. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எதிர்வரும் 05.08.2023 அன்று 16ஆம் முறையாக பனிமய அன்னை பொற்தேரில் பவனி வரவிருக்கிறார்கள்.
தங்கத்தேரின் சிறப்பு
  •   அன்னையின் தங்கத்தேர் அன்று முதல் இன்று வரை அன்னையின் மங்கள மாலையாம் ஜெபமாலையை நினைவிற்கொண்டு 53 அடி உயரம் கொண்டது.
  •    அன்னையின் தேர் திருச்சபையின் போதனைக்கு உட்பட்டு மாதாவின் மகிமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
  •   விடியலின் வெளிச்சம் மீட்பின் முன்னோடி என்பதை மெய்ப்பிக்க உச்சியில் உதய தாரகையும்,
  •    பரிசுத்த ஆவியின் கொடைகளை மெய்ப்பிக்க ஏழுகதிர்களும்,
  •    சுழலும் விண்மீன்களும்,
  •    விண்ணவர்க்கரசி, மண்ணவர்க்கரசி என்பதை நினைவூட்ட மகுடமும்,
  •    பிதாவின் குமாரத்தி என்பதற்காக பிதாவின் இருக்கை பீடமும்,
  •   பன்னிரு கோத்திரங்களை நினைவுபடுத்தும் வகையில் பன்னிரு தூண்கள் தாங்கி நிற்கும் பீடமதில் சுதனை கரமேந்தி தாய் அமர்ந்திருப்பதும்,
  •   அதற்குமேலாக பரிசுத்த ஆவியின் பத்தினி இவள் என்பதை எடுத்துக்காட்ட புறாவடிவில் பரிசுத்த ஆவியும் உள்ளார்கள்.
  •   மன்னருக்கு மன்னரான மாபரனை தந்தவள் என்பதால் விவிலியம் காட்டும் பன்னிரு வேந்தர்களும்,
  •   வேத சாட்சிகளின் திட தைரியமானவள் என்பதால் வேதசாட்சிகளும்,
  •   பரிசுத்தவான்களின் முன்மாதிரிகை என்பதால் புனிதர்களும்,
  •   நற்செய்தியாளர்கள் கண்டு பாவித்த நற்செய்தி இவளென்பதால் நான்கு நற்செய்தியாளர்களும்
  •    சம்மனசுகளின் இராக்கினி இவள் என்பதால் வானதூதர்களும்
தேரில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இவைகளோடு இரண்டு கடல் கன்னியரும், இரண்டு காளையரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் தாய் வழிபாடுமிக்க பரதவர்கள் அங்கயற்கண்ணியின் அடையாளமிக்க நான்கு கிளிகளும் உள்ளது.